தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் சமத்துவ எண்ணங்களை போதிக்க வேண்டும்.. நெல்லை மாணவர்கள் மோதல் விவகாரத்தில் ஈபிஎஸ் வலியுறுத்தல்! - Tirunelveli students clash - TIRUNELVELI STUDENTS CLASH

Tirunelveli students clash: திருநெல்வேலி அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலை மேற்கோள்காட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:18 PM IST

சென்னை:திருநெல்வேலி அடுத்த மருதகுளம் பகுதியில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பொன்னாக்குடி மற்றும் மாயனேரி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இருவர் படுகாயம் அடைந்து நேற்று (திங்கட்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நாங்குநேரியில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது, "திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான பிரச்னையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், சாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் சாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக மீண்டும் களமிறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி.. ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி

ABOUT THE AUTHOR

...view details