எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு வேலூர்: வேலூர், வாலாஜா பகுதியில் நடைபெறும் சொந்த கட்சி உறிப்பினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.11) வேலூருக்கு வந்திருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகரம் கோயம்பேடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே அதிமுக ஆட்சியில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு பணிகள் முழுமையாக முடிக்காமலேயே அவசரகதியில் அதுவும் தைப்பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆனால், மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே தங்கி இருந்த சூழ்நிலையையும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்த வகையில், திமுக அரசு எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அதன் காரணமாக மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக அரசு உள்ளது. தமிழகமெங்கும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்துவிட்டது. அதற்குப் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதே முக்கிய காரணமாகும். கஞ்சா போதையில் உள்ள நபர்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தயாராக இல்லை" என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:கிளாம்பாக்கம் பேருந்து முனையம்; 2வது நாளாக தொடர்ந்த போராட்டம்.. கூடுதல் பேருந்துகள் இயக்கியதாக அரசு விளக்கம்!