தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருப்புகழ் கமிட்டி பரிந்துரை பின்பற்றப்பட்டதா? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி!

திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த அறிவுரைகளை அரசு எவ்வாறு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பின்பற்றியது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:அதிமுகவின் 53ஆம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழக வரலாற்றில் ஐந்து முறை ஆட்சி செய்த ஒரே இயக்கம் அதிமுக. ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒரே இயக்கம் அதிமுக.

பொய்யான தகவலை திமுக பரப்புகிறது: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. பின்னர் விளக்கிக் கொள்ளப்பட்டாலும், ஒரு நாளில் பெய்த மழைப்பொழிவை சமாளிக்க ஸ்டாலின் அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையில் மழை நீரே தேங்க வில்லை என பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

மழைநீர் வடிகால் பணிகள் என்னாச்சு?சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் 99 விழுக்காடு முடிந்து விட்டதாக தமிழக முதலமைச்சரும், துறை சார்ந்த அமைச்சர்களும், மேயரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளது மக்கள் மழை நீரில் தத்தளிப்பதை வைத்து அதனை உறுதி செய்ய முடியும்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

திருப்புகழ் கமிட்டி பரிந்துரை:சென்னை மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்தது. ஆனால் அதை ஸ்டாலின் அரசு நடைமுறைப்படுத்தியதா என்பது பற்றிய முறையான வெள்ளை அறிக்கை திமுக வெளியிட வேண்டும்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் பொறுப்பாக எடுத்து பணிகளை மேற்கொண்டோம். அடையாறு, கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு பருவமழை காலத்துக்கு முன்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தோம்.

மழைநீர் வடிக்கால் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை:ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற ஆண்டு முதல் மழை நீர் வடிக்கால் அமைப்பது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களையே தெரிவித்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் 2400 கிலோமீட்டர் தூரத்துக்கு வாடிக்கால் அமைக்க திட்டமிட்ட நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் வரையில் மட்டுமே வடிகால்வாய் பணிகளை திமுக செய்துள்ளது. அதுவும் முழுமை பெறாத நிலையில் தொடர்ந்து மற்ற மழைநீர் வடிகால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும்.

அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்:அதிமுக என்றுமே ஒன்றாகவே இருக்கிறது. ஒன்றாக இருப்பதால்தான் தற்போது அதிமுக தலைமையகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்.

சென்னையை அடுத்த முட்டுக்காடில் திமுகவினர் வாங்கி குவித்துள்ள நிலங்களின் மதிப்பை உயர்த்தவே, முட்டுக்காடு அருகே சுமார் 587 கோடி ரூபாயில் கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்க ஸ்டாலின் அரசு திட்டமிட்டு வருகிறது. சென்னை வர்த்தக மையம் அருகே 14 ஏக்கரில் காலி நிலம் இருக்கும்போது, அந்த நிலத்தை ஏன் திமுக பயன்படுத்தவில்லை” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details