தருமபுரி:முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினமான கே.பி.அன்பழகனின் இளையமகன் சசி மோகனின் மனைவி பூர்ணிமா கடந்த 18ஆம் தேதி தீ விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.25) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நேற்றிரவு நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஹள்ளியில் உள்ள கே.பி.அன்பழகன் வீட்டிற்கு இன்று நேரில் சென்று உயிரிழந்த பூர்ணிமாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மகன் சசி மோகன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முல்லைவேந்தன், அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜன.18ஆம் தேதி பூர்ணிமா தனது வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்து விளக்கு எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்ததில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், உடலில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூர்ணிமா வேலுர் சிஎம்சி மருத்துவமனையில் ஒருவாரமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?