சென்னை: இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அதிமுகவினர் அனுமதி கோரினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் அனுமதிக்கப்படும் எனக் கூறிய பிறகும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நாட்டில் நடக்கின்ற ஒரு செயலை சட்டமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு எனவும் நாங்களும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அப்படிப்பட்ட பிரச்சனைகளை சபையில் இருந்து பேசி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், சபைக்கு வருவது எதற்காக கருப்பு சட்டை அணிந்தார்களோ, அதற்கான காரணத்தை விளக்கத்தை இங்கு பேசாமல் வெளியே போய் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசும் செயலை தொடர்ந்து செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இங்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறித்து பேச பயந்து கொண்டு தான் உள்ளே வருவது வெளியே போவது என உள்ளார்கள் எனவும் முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். அவர்களது குழந்தைகளின் படிப்புக்கு உதவி இருக்கிறார். இதைவிட ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் ஆட்சியில் குறை சொல்லுவார்கள் என்று பயந்துதான் முதலமைச்சர் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என பயந்து தான் உள்ளே வருவது வெளியே போவது என மலிவான விளம்பரத்திற்கு எதிர்க்கட்சிகள் அலைகிறார்கள் எனத் தெரிவித்தார்.
பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்தும், சட்டப்பேரவை விதிகளைத் தொடர்ந்து முறையற்று பயன்படுத்துவதாலும் பேரவைக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கின்ற வகையில் செயல்படுவதாலும், சபாநாயகர் தொடர்ந்து எச்சரித்தும் பேரவையின் அலுவலைத் தடுத்துக் கொண்டிருக்கும், கோஷமிட்டிருந்த அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவை விதி 171 உள்விதி இரண்டின் கீழ், அதிமுக உறுப்பினர்களை பேரவை பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.