கோயம்புத்தூர்:இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 11ஆம் தேதி கோயம்புத்தூரில் பில்லூர் 3வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதன்படி, கோவை சரவணம்பட்டி பகுதியில் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் முத்துசாமி , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் இருந்தனர்.
ஆய்வினை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ அமைச்சர் உதயநிதி பில்லூர் 3 வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் வாரம் ஒரு முறை,10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது. பில்லூர் 3 திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு தினமும் தண்ணீர் கொடுக்க முடியும்.
கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம்” என்றார். தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில்,“கோவையில் மாஸ்டர் பிளான் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும். 30 வருடத்திற்கு தேவையான பணிகள் அதில் செய்து இருக்கின்றோம்” என தெரிவித்தார்.