சென்னை: டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொட்டலங்கள் என்ற பெயரில் பல கோடி மதிப்புடைய போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் எனக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் அவருடைய நண்பர் தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழில் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் ஹவாலா பணத்தை மாற்றிக் கொடுக்கும் பணியில் ஹவாலா தரகர் ஒருவர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.