சென்னை:தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளில், அரசு நிர்ணயித்த அளவை விட மணல் அள்ளப்பட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை முடக்கினர்.
மேலும், நான்காயிரம் கோடிக்கு மேல் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு முறைகேடாக சம்பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர், திருச்சி ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு அழைத்தனர்.
இதில் நேற்று காலை ஐந்து மாவட்ட ஆட்சியர்களும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்தனர். அவர்களிடம் சுமார் பத்து மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் மணல் குவாரிக்கு உரிமம் வழங்கும் இறுதியான முடிவு மட்டுமே தங்களிடம் வரும், அதற்கு முன்பாக நீர்வள ஆதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, தாசில்தார் உள்ளிட்டோர் அனுமதி கடிதங்களை பரிசீலித்த பின்னர், இறுதியான முடிவு மட்டுமே தங்களிடம் வரும் என ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.
அமலாக்கத்துறையின் 10 மணி நேர விசாரணைக்கு, ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் முழு ஒத்துழைப்பு தந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: பிசிசிஐ-க்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Chepauk Stadium Black Tickets