மதுரை:திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அங்கீத் திவாரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கித் திவாரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்.
ஜாமீன் வழங்கும் பட்சத்தில், நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்” எனக்கூறி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதனையடுத்து, இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், “அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.