சென்னை: தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9 மாதங்களாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த மணல் அள்ளும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஏப்ரலில் அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்தனர். மேலும், முறைகேடாக மணல் அள்ளிய இந்த வழக்கில், ரூ.130 கோடி அளவிலான அசையும் சொத்துக்களையும், ரூ.128 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக, அமலாகத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர், அந்த கடிதத்தில், “தனியார் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக சட்டவிரோதமாக சுமார் ரூ.4,730 கோடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு இந்த மோசடியில் தனியார் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. தொடர்ந்து, அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் ரூ.23.64 லட்சம் யூனிட் மணல், கடந்த ஆண்டு மட்டும் அள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.