திருநெல்வேலி:தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி, சுமார் 15 கி.மீ தூரம் வனப்பகுதியைக் கடந்து பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளைத் தழுவி, நகருக்குள் பாய்ந்து ஓடுகிறது.
திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தைக் கடந்து புன்னக்காயல் என்ற கடற்கரைப் பகுதியில் தாமிரபரணி ஆறு கலக்கிறது. பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி, பல்வேறு வரலாற்று பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகரிகம் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இது போன்ற பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாமிரபரணி நதி, திருநெல்வேலி மட்டுமல்லாது தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேற்கண்ட அணைகளுக்கு கீழ் கோடை மேலழகியான் கால்வாய், கண்ணடியன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்பட மொத்தம் எட்டு கால்வாய்களைக் கடந்து, சுமார் 180 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
தாமிரபரணி நதியை நம்பி சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாமிரபரணி நதி, சமீப காலமாக மாசடைந்து வருவது, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நகர்ப் பகுதியில் மாநகராட்சியின் சரியான திட்டமிடல் இல்லாத பாதாளச் சாக்கடைத் திட்டத்தால், குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், தொழில் நிறுவனக் கழிவுகள், வாகனக் கழிவுகள் உள்பட பல்வேறு வகையான கழிவுகள் ஆற்றில் கலப்பதால், தாமிரபரணி ஆற்று நீர், தற்போது குடிக்கும் தன்மையை இழந்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே குளிக்கும் தரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றை குடிக்கும் தரத்திற்கு மாற்ற வேண்டும் என பலகட்ட முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பொதிகை மலையில், ஒரு சதவிகிதம் கூட கழிவுகள் கலக்காமல், முழுக்க முழுக்க தூய்மையான நீராகவே கீழிறங்கி வருகிறது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதிகளைக் கடக்க கடக்க, ஆறு முழுமையாக மாசடைவதைக் காண முடிகிறது. இது போன்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் வாழும் மீன் இனங்கள் குறித்தும், அவற்றால் நதி நீர் பாதுகாக்கப்படுவது குறித்தும், அகத்தியர் மலை காப்பகம் அமைப்பு சார்பில் பல்வேறு ஆராய்ச்சி மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாமிரபரணியின் மீன் வகைகள், அவற்றின் தற்போதைய சூழல் குறித்த விரிவான கருத்தரங்கம், திருநெல்வேலி ரஹ்மத் நகரில் செயல்பட்டு வரும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்றது. அகத்தியர் மலை காப்பகம், மாவட்ட நிர்வாகம், இயற்கை அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், தாமிரபரணி நதி மற்றும் அதனுடைய தற்போதைய நிலை குறித்து விரிவாக பேசப்பட்டது.