சென்னை:வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை சிவானந்தா காலனியில் ஐந்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், அதன் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “ஜனநாயகத்தில் வாக்கு என்பது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் மதிப்புமிக்க, சக்திவாய்ந்த அகிம்சை ஆயுதம். அந்த வாக்கின் புனிதத்தைக் காக்க வேண்டிய கடமை அரசியல் சட்ட அதிகார அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கும், மக்களுக்கும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்க்ளுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதால் ஜனநாயகக் கொள்கையும், அரசியல் சாசன புனிதமும் கெட்டு விடுகின்றன. நல்ல பிரதிநிதிகளைப் பெற முடியாமல் போகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தாலும், போலீசாராலும் தடுக்க முடியவில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஏப்ரல் 11ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:யூடியூபில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரிக்க நூதன திட்டம் - வினாத் தாள்களை கசிய விட்ட ஆசிரியர் கைது!