சென்னை:சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் 50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு கட்டுமான தொழிலதிபர் லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில், அப்போதைய ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரை இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னிமில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, இரண்டு கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை அகற்றுவதற்காக லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக லேண்ட் மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட் என்ற நிறுவனத்தில், இதற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அப்போது அந்த விசாரணையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களின் பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்.