வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE". டெல்லி முதல்வர், ஜார்க்கண்ட் முதல்வர் போன்றோரின் கைது எதிர்கட்சிகளுக்கு பாதிப்பு என்பதை விட நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு.
தேர்தல் நேரத்தில் நடுவில் இறங்கி தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இத்தகைய செயலை செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல, மோடி போன்றவர்களுக்கும் அழகல்ல என்பதுதான் எனது கருத்து. ஆளுநரை நாங்கள் எதுவும் திட்டவில்லை, ஆனால் உச்ச நீதிமன்றம் திட்டி இருக்கிறது, இதற்குப் பிறகும் அவர் அந்த பதவியில் தொடர்வது அவருக்கு அழகல்ல. காரணம், உச்ச நீதிமன்றம் இதுவரையில் எந்த ஒரு அரசு அதிகாரியைப் பற்றியும் இவ்வளவு கேவலமாக சாட்டையில் அடிப்பது போல் பேசியது இல்லை. இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால், இவருக்கு சூடும் இல்லை, சொரணையும் இல்லை என்றுதான் அர்த்தம்” என்றார்.