வேலூர்:வேலூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி அருகே சேவூர் பகுதியில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் 7 ஏரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் எனவும், மேலும் ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும் எனவும், மேலும் ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்கும் போது ஆங்காங்கே எடுக்கவிடாமல் அதை முறைப்படி எடுக்க அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இதனால் மண் எடுப்பவரும், விவசாயிகளும் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது குறித்து பேசிய துரைமுருகன், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தமிழக அரசு தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார். காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும், இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கூறினார்.