புதுக்கோட்டை: திருச்சி நாடாளுமன்ற உறுப்பிர் துரை வைகோ, முதல் முறையாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று வந்தார். அவருக்கு மதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
துரை வைகோ பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “தமிழகத்தில் திமுகவிற்கு மாற்றுக் கட்சி அதிமுக தான். இங்கு மதவாத கட்சிகளுக்கு இடமில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருக்கக்கூடாது. அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்து இருந்தாலும், அவர்களின் வாக்கு திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
அண்ணாமலையே ஒரு பேய் தான், வேதாளம் வேதம் ஓதுகிறது என்று பழமொழி உண்டு. இவரே ஒரு பேய், இவர் எப்படி இன்னொரு பேயை விரட்ட முடியும்? நாடாளுமன்றத்தில் எனது கன்னிப் பேச்சாக காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசி உள்ளேன்.
இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று எனது கன்னிப் பேச்சாக நாடாளுமன்றத்தில் பேசி உள்ளேன். மேலும், தென்னிந்திய நதிகளையும் இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவின் அன்னியூர் சிவா அமோக வெற்றி.. பாமக, நாதக வாங்கிய வாக்குகள் என்ன?