தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய ஆறு மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை ரா.முருகன் தலைமையில் நேற்று (பிப்.12) நடைபெற்றது.
அதிமுக-பாஜகவின் பிரிவு மகிழ்ச்சி:இதில், மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் அக்கட்சியின் தொண்டர்கள் பலரும் ஒரு லட்சத்துக்கும் அதிமான பணத்தை நிதியாக வழங்கினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பதற்கு நான் பதிலளிக்க முடியாது. அதனை நீங்கள் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், மதவாத பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி இருப்பதை திராவிட இயக்கம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான்.
மதிமுகவிற்கு 2 லோக்சபா, 1 ராஜ்ய சபா தொகுதிகள் கேட்டுள்ளோம்:மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை. மதிமுக சார்பில் இந்த முறை 2 லோக்சபா, 1 ராஜ்ய சபா கேட்டிருக்கிறோம். எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதனை கூட்டணி தலைமையும், இயக்க தலைமையும் தான் முடிவு செய்யும். திமுகவில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் 10 தினங்களில் நிறைவு பெற்றுவிடும்.
இது பாஜகவை வீழ்த்துவோம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் மதவாத பாஜகவை வீழ்த்தும் தேர்தலாக அமையும். திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 100-க்கு 100 விழுக்காடு என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்திய அளவில் இந்தியா கூட்டணியும் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு உள்ளிட்ட பாஜகவை எதிர்க்கும் கட்சிகள், ஆளும் மாநிலங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வஞ்சித்தே வருகிறது. குறிப்பாக, இந்த அரசுகளுக்கு எதிராக அந்த அந்த மாநில ஆளுநர்கள் வாயிலாக பேரலல் கவர்மண்ட் நடத்தி தொல்லைகள் தரப்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'சென்னை புயல், தூத்துக்குடி வெள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்தியக் குழு வந்து பார்வையிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக வந்து பார்வையிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37 ஆயிரம் கோடியில் இதுவரை 1 ரூபாயைக் கூட மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூ.450 கோடி கூட பேரிடர் நிவாரண நிதி மட்டுமே. இதற்கு மற்றொரு உதாரணம் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் ரூ.63 ஆயிரம் கோடியில் மதிப்பிடப்பட்டு இதற்காக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது. 2020ஆம் ஆண்டு அமித்ஷா இதற்கு அடிக்கல் நாட்டினார்.