மதுரை: சென்னை அண்ணா நகரில் உள்ள மஹாலில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30வது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மதிமுக தொண்டரணியைச் சேர்ந்த மதுரை நிர்வாகிகள் பச்சமுத்து, புலி சேகர், அமிர்தராஜ் உள்ளிட்டோர் கார் மூலம் மீண்டும் மதுரை திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அதிவேகமாக வந்த கார் மதுரை, மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதிமுக மாநில தொண்டரணி துணைச் செயலாளர் பா.பச்சமுத்து, மதுரை மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பா.அமிர்தராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் புலி சேகர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து விட்டு, மதுரைக்குத் திரும்பிய போது மேலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கட்சி தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் வேண்டுகோளின் படி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் நிதி அளித்து வந்தனர்.