திருச்சி: மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அட்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ, "தேர்தல் ஆணையம் தான் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, மதிமுகவின் சின்னம் பம்பரம் என்பதால் அதனை லாக் செய்து வைத்துள்ளனர். அதில் வேறு யாரும் போட்டியிட முடியாது.
ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டம் இருந்தாலுமே, தற்போது இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது எனவும், ஆகையால் சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் படி, சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வக்கீல் கேட்க உள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம்.