தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்கள்.. செய்வதறியாமல் தவிக்கும் சேலம் விவசாயிகள்! - heavy rainfall in Salem

Rain Affected Agricultural Land In Salem: சேலத்தில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய நிலத்தில் புகுந்த மழைநீரில் மூழ்கி பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 12:15 PM IST

Photo related to rainwater infiltration in agricultural land
விவசாய நிலத்தில் புகுந்த மழைநீர் தொடர்பான படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம் விவசாயிகள் பேட்டி (Video Credit - ETV Bharat Tamil Nadu)

சேலம்:தமிழ்நாட்டில் மார்ச் முதல் மே மாதம் வரை கோடைக் காலத்தில் 12.5 செ.மீ மழைப் பதிவாவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நேற்றைய முன்தினம் (மே 20) வரை சுமார் 9.63 செ.மீ மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 விழுக்காடு குறைவானதே ஆகும். இந்த நிலையில், நேற்று (மே 21) காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், அதிகப்படியாக 7.12 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மற்றும் 12 கால் நடைகள் பலியாகியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், சேலம் மாநகரில் நேற்று (மே 21) இடைவிடாமல் சுமார் பத்து மணி நேரமாக பலத்த கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், கந்தம்பட்டி அருகே உள்ள திருமணிமுத்தாறு ஓடைப் பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மழைநீர் புகுந்தது.

மேலும், நேற்று (மே 21) பெய்த கனமழையில் அந்த விவசாய நிலத்தில் மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் மழைநீர் முழுமையாக மூழ்கி சேதமாகின. அதுமட்டும் அல்லாது, இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பில் கழிவுநீர் கலந்த மழைநீர் முழுமையாக நிரம்பி உள்ளதாலும், நீரை வெளியேற்ற முடியாமலும் விவசாயி செல்வம் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி செல்வம் கூறுகையில், "இந்த திருமணிமுத்தாறு ஓடை பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் மழை நீர் வெளியேற வடிகால் இல்லாமல் உள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயர் மின் கோபுரம் அமைத்து தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளது.

இந்த உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்களும் அப்படியே வாய்க்காலில் போடப்பட்டதால் முழுமையாக மழைநீர் வெளியேறாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. ஆகவே, உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து, மழை நீரை வெளியேற்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறுகையில், திருமணிமுத்தாறு ஓடைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரம் ஆகியவை அரசிடம் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மழைநீர் செல்ல வழியில்லாமல் அனைத்து மழைநீரும் விவசாய நிலத்தில் புகுந்து பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர்களும் மழைநீர் முழுமையாக மூழ்கி சேதமாகியுள்ளது. ஆகவே தமிழக அரசு தலையிட்டு, அரசிடம் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள பாலம் மற்றும் உயர் மின் கோபுரம் ஆகியவற்றை அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:கேஆர்பி அணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details