மதுரை:தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு காரணமாக, மதுரை மல்லியின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது, புகழ் பெற்ற மலர் வணிக வளாகம். இங்கு நாள்தோறும் 50 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, மேலூர், கெட்டாம்பட்டி, வலையங்குளம், கப்பலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக மதுரை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக, இந்த பகுதிகளில் மதுரை மல்லிகைக்கென நல்ல விலையும், உலகளாவியச் சந்தை வாய்ப்பும் உள்ளது. இந்த மதுரை மல்லியில் நறுமணம் மற்றும் அதன் தரம் காரணமாக, மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு மதுரையிலிருந்து மல்லிகை பூ ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.