சென்னை: சென்னையில் ஓரிரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது.
சென்னை விமான நிலையம் (credits-ETV Bharat Tamil Nadu) குறிப்பாக, தாம்பரம், பள்ளிக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அடையாறு, மயிலாப்பூர், குன்றத்தூர் மற்றும் வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் மீனம்பாக்கம், தாம்பரம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இவ்வாறு பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் பயணிகள் வெளியேறும் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த பகுதி குளம் போல் காட்சியளித்தது.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு விமான நிலைய ஊழியர்கள் மழைநீரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே பயணிகள் வெளியேறினர்.
இதையும் படிங்க:சென்னையில் பலத்த மழை.. விமான சேவை கடும் பாதிப்பு! - Chennai Rain