தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர்.. சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு!

Chennai airport: வடமாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Flight service affected in Chennai
சென்னையில் விமான சேவை பாதிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 5:25 PM IST

சென்னை:வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில், வட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து லண்டன், மஸ்கட், துபாய், அபுதாபி, கோலாலம்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள் மற்றும் அயோத்தி, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், கோவா உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல், 15 வருகை விமானங்களும், இன்று சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும் போது, வடமாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளில், கடும் குளிர் உடன் கூடிய மோசமான வானிலை நிலவுவதால், விமானங்கள் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்னைக்கு வருகின்றன என்று கூறுகின்றனர்.

இதற்கிடையே, அயோத்தி செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையிலிருந்து விமான சேவையைத் தொடங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை இன்று (பிப்.01) அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த விமானம் சென்னையில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட வேண்டியது, ஆனால் தாமதமாக பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதேபோல், இன்று (பிப்.01) ஒரே நாளில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என 30 விமானங்கள் திடீரென தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க:சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details