திருச்சி:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆகையால், திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீரைப் பிரித்து திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம் 850 மீட்டர் நீளத்தில் 6.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதால் கொள்ளிடம் ஆற்றில் நேற்று 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீரோட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்ததால் தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து அதிகரித்ததால் புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே, தடுப்பணை எவ்வளவு தூரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளிடம் பாலத்தின் அருகில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. ஆகையால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், உயர் மின்னழுத்த கோபுரம் சாயாமல் இருப்பதற்கு இரும்புக் கம்பிகள் கொண்டு அதனை வலுப்படுத்துவதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரவு என பாராமல் பணியைச் செய்து உயர்மின் கோபுரத்தை இரும்பு கம்பியால் இழுத்துக் கட்டினர்.