அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி, முன்னே நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி நின்று கொண்டிருப்பது தெரியாமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களும், லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், விபத்து நடந்த போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.