சென்னை: திருவான்மியூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 95 X என்ற தடம் எண் கொண்ட மாநகர பேருந்து இன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு வழக்கம் போல் திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் பன்நோக்கு பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
தற்போது, ஓஎம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலைகள் குறுகலாக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ பள்ளி அருகே பேருந்து வந்த நிலையில், சரக்கு வாகனத்தை முந்தி செல்லும் பொழுது மெட்ரோ பணிக்காக போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாயுள்ளது.
இதனையடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் மீண்டும் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து, ஓஎம்ஆர் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் பேருந்தை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இது குறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்கும்போது, அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மது போதையில் இருந்ததாக, வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.