சென்னை:மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று (புதன்கிழமை) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படை பிரிவினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளியே வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கி, பயணிகள் வெளியில் வரத் தொடங்கினர்.
அப்போது, இரண்டு குழந்தைகளுடன் வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர் மீது சந்தேகித்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும், தற்போது வேலை பிடிக்காததால், திரும்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த காரணம் குறித்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவர்களுடைய உடைமைகளைச் சோதித்தனர்.