மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலர் ஒருவர் பெட்ரோல் பங்க் பகுதியில் சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் செல்போனில் அழைப்பு வந்ததால், வாகனத்தை இடதுபுறமாக ஓரங்கட்டியுள்ளார்.
அப்போது, பின்னால் வந்த காவல் அலுவலர் தடுமாற்றிய நிலையில் ஆத்திரமடைந்து, அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை அந்த நபர் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த காவல் அலுவலர், அந்த நபரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை கழகம் அருகே தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், காவல் அலுவலரிடம் இருந்து தப்பிய இளைஞர் வாகனத்தில் ஏறி சென்ற நிலையில், அவரை மீண்டும் விடாமல் மகாதானத் தெரு அருகே துரத்திப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் பகல் சுமார் 2 மணியளவில் அந்த வழியாக சென்ற திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து என்ன பிரச்னை, எனத் தட்டிக்கேட்டுள்ளார்.
திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கரூரில் மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு கணவர் தற்கொலை முயற்சி!
அப்போது, காவல் அலுவலர், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு அந்த இருச்சக்கர வாகனத்தை இயக்கி வந்த நபரையும் அவரது சமூகத்தை பெயரை குறிப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த காவல் அலுவலர் அந்த நபரை மயிலாடுதுறை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து, தி.வி.க. மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காவல் நிலையம் வந்து பேச்சு வார்த்தை நடத்திய பின் அங்கிருந்து அந்த நபரை காவல்துறையினர் விடுவித்தனர்.
இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் அந்த காவல் அலுவலர் மீது புகார் மனு தாக்கல் செய்தார். இது குறித்து பேசிய திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் , “ சீருடை அணியாமல் நடுரோட்டில் இளைஞரை தாக்கி, சாதிய தாக்குதல் நிகழ்த்தியதாக குறிப்பிட்டு மயிலாடுதுறை காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளோம்”.
“மேலும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். இப்பிரச்னையில் தொடர்புடைய காவல் அலுவலர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இதைபோல் சாதி ரீதியாக ஒருவரைத் தாக்கி நிலையில் அதனைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.