சென்னை:கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையைத் தொடர்ந்து, மருத்துவமனைகளுக்குள் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நுழையலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. பாதுகாப்புக் கருதி பல கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், 'மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறோம். மருத்துவ மாணாக்கர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை, புகார்களை தீர்த்திட மாநில மற்றும் கல்வி நிறுவன அளவிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் என்ற அமைப்பை உருவாக்கிட வேண்டும்.
மேலும், பணியிடங்களில், பணி நேரங்களில் பாதுகாப்பு இல்லாதது, பாலியல் தொந்தரவுகள் போன்றவை அவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. விடுப்புகளைப் பெறுவதில் பிரச்சனை, தேர்வில் தேர்ச்சி மற்றும் கோட்பாட்டு ஆராய்ச்சிகள் (Thesis) செய்வதில் பல்வேறு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் என மருத்துவ மாணாக்கர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஊக்கத்தொகை மற்றும் ஊதியம் பெறுதலில் பிரச்சனைகள் உள்ளன. விடுதி வசதிகள், ஓய்வறை வசதிகள் இல்லாமை தொடர்கிறது. இவற்றை தீர்த்திட மாநில, மாவட்ட அளவில் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் உருவாக்கிட வேண்டும். அனைத்து மருத்துவமனையிலும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்திட வேண்டும். மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனையின் பாதுகாப்பிற்கு அந்த அமைப்பு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.