சென்னை:கிண்டி மருத்துவமனை மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து நடைபெறவிருந்த காலவரையற்ற போராட்டத்தை திரும்பப் பெற்று, தர்ணா போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கிண்டி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது அதனைக் கண்டித்து மருத்துவர்கள் சங்கம் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தலைமைச்செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் அகிலன், "மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது. மருத்துவரைத் தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் தொடர்புள்ள மற்ற நபர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் அமைச்சரிடம் கூறினோம்.