சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 16) வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் மொத்தம் 1016 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த புவனேஷ் ராம் 41வது இடத்தை பெற்று தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பிரசாந்த் என்பவர் 78வது இடத்தை இந்திய அளவிலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். இவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு ஆபிஸர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரசாந்த் பிரத்தியேகமாகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது கூறியதாவது, "ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி. தான் படிக்கும் பொழுதே மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்தேன்.