சென்னை: சென்னை தி.நகர் பகுதியை தொழிலதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த ஜூலை மாதம் ஆழ்வார் பேட்டையில் உள்ள இந்தோ - ரஷ்யன் பிசினஸ் அசோசியேட் (Indo-Russian Business Associates) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அருண்ராஜ். இவர் தன்னை நேரில் சந்தித்து தான் இந்தோ - ரஷ்யன் பிசினஸ் அசோசியேட் பிரதிநிதி என்று அறிமுகம் படுத்திக்கொண்டார்.
இதையடுத்து ரஷ்யா அரசு, இந்திய திட்டங்களுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும், இதற்காக நீங்கள் திருச்சியில் நடத்தும் வியாபாரத் திட்டத்திற்கு 2000 கோடி வரை முதலீடு பெறலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். இதனை நம்பி தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடத்த அக்டோபர் மாதம் வரை அருண்ராஜ் நடத்திவரும் நிறுவன வங்கி கணக்குக்கு 7 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன்.
பிறகு அவர்கள் தன்னிடம் முறையாக எதுவும் பேசாமல் தன்னை அலைக்கழித்து வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டேன்.
மேலும் அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்து தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பள்ளியில் வைத்து ஆசிரியை கொலை; திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்!
புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தொழிலதிபரை நூதன முறையில் நம்ப வைத்து மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மதன்குமார், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மன், ரூபா, விக்னேஸ்வரன், டாஸ்மாக் தாசில்தார் விஸ்வநாதன், சசிகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தொழிலதிபரை ஏமாற்றிய முக்கிய குற்றவாளி அருண்ராஜ் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சிவா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக அருண்ராஜ் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கூர்க் என்ற பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்த சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (38), என்பவரையும் அவரது கூட்டாளிகளான புதுக்கோட்டையைச் சேர்ந்த சேர்ந்த குமரன்(43), சென்னை சோழவரம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (39), ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் வசித்து வந்த பகுதிகளில் சோதனை நடத்தி 476 சவரன் தங்க நகைகள், 400 கிலோ வெள்ளி பொருட்கள், 14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார்கள் ஆகியவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள மோசடி நபர் அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளால் இதே போன்று ஏமாற்றப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் பொதுமக்கள் இது போன்ற மோசடி முதலீட்டாளர்களை நம்பி பணம் முதலீடு செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்