சென்னை: பெண்கள் கர்பவிக்கும் நாள் தொடங்கி குழந்தை பிறந்து வளரும் காலம் முழுவதும் என தாய் மற்றும் குழந்தையின் உலகம் இருவரையே சுற்றி வந்தது. தற்போது அந்த உலகத்தில் மாறுதல் ஏற்பட்டு குழந்தையை பராமரிக்க ஆண்களும் தயாராகி வருகின்றனர். ஆனால், குழந்தை வளர்ப்பில் ஆணின் பங்கு என்ன? இவ்வளவு காலமாக ஆணின் ஈடுபாடு இல்லாததால் அவர்கள் தவறவிட்டது என்ன? என்பதை யுனிசெஃப் அமைப்பு (United Nations Children's Fund) உலக தந்தையர் தின நாளில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
உலக முழுவதும், வேலைக்கு செல்லும் பெண்கள் மகப்பேறு காலத்தில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து குழந்தையை பார்த்துக்கொள்வது போல ஆண்களுக்கு அதிக வசதி இருப்பதில்லை. ஆனால், குழந்தையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் மால்டோவா, பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான நேரம், வளங்கள் மற்றும் தகவல்களை வழங்குகின்றன.
பொன்னான காலத்தில் தந்தையின் பங்கு: ஒரு மனிதனின் வாழ்நாட்களில், முதல் 1,000 நாட்களை விட மூளை வளர்ச்சிக்கு முக்கியமான காலம் எதுவுமில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க கூடும். குழந்தையின் ஆயுட்காலம் முழுவதும் நிர்ணயம் செய்யக்கூடிய ஆரோக்கியம், வளர்ச்சி, என்பதற்கு அடித்தளமாக இருப்பது இந்த முதல் 1,000 நாட்கள். அதாவது, கருத்தரிப்பதற்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளுக்கும் இடைப்பட்ட காலம். இந்த காலத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்களுக்கு தந்தையின் பங்கு அதிகம்.
அதனால்தான், தாய்மார்களுக்கு முழு ஊதியத்துடன் ஆறு மாத விடுமுறையும், தந்தைகளுக்கு 8 முதல் 16 வார விடுப்புகளையும் யுனிசெஃப் வழங்குகிறது. இந்த தந்தையர் தின நாளில், தங்களது மகனோ அல்லது மகளோ சிறந்த ஆண் அல்லது பெண்ணாக வளர்வதற்கு உங்களது பங்கு மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.