சேலம்:கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய இடங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, கெங்கவல்லியில் நடக்கவிருந்த அந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு, தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தைச் சேர்ந்தவர்கள் தலா 25 பேர் வீதம் இரண்டு மினி சரக்கு ஆட்டோக்களிலும், 27 பேர் மற்றொரு மினி சரக்கு ஆட்டோவிலும் என மூன்று ஆட்டோக்களில், காமக்காபாளையத்தில் இருந்து நாவலூர் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, 27 பேருடன் சென்ற மினி சரக்கு ஆட்டோவை ஓட்டுநர் ராஜதுரை (48) ஓட்டியுள்ளார். இந்நிலையில், மாலை 4 மணிக்கு நாவலூர் ஏரிக்கரை வளைவில் ஆட்டோ சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சரக்கு ஆட்டோ ஏரிக்கரையில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த அனைவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 27 பேரும் தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் 23 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததால், அவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதில் திமுக ஒன்றிய இளைஞரணி பிரதிநிதியான தயாநிதி மாறன் (29) மற்றும் திமுக உறுப்பினரும், கூலித் தொழிலாளியுமான செல்லத்துரை (30) ஆகியோர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 21 பேருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் உள்ளனர். தற்போது போலீசார் இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, காமக்காபாளையத்தில் இருந்து கெங்கவல்லி நோக்கிச் சென்ற மூன்று மினி சரக்கு ஆட்டோக்களும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் கொடிகள் கட்டியவாறு நடுமேடு பஸ் ஸ்டாப் வந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூன்று ஆட்டோக்களையும் நிறுத்தி, ஓட்டுநர்களிடம் கொடிகளைக் கழட்டுமாறும், பாதுகாப்பாகச் செல்லும்படியும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளேயே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கட்சியினரின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களை திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னதுரை, குணசேகரன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஆகியோர் நேற்று இரவு 7 மணிக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். ஆனால், பிரச்சாரத்தின் போது விபத்து ஏற்பட்டதால், திமுக நிர்வாகிகள் முகம் இறுகிய நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Madurai Accident