தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூதாகரமாகும் நீட் தேர்வு விவகாரம்; சென்னையில் ஜூன் 24 இல் திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்! - dmk neet protest - DMK NEET PROTEST

neet exam issue: நீட் தேர்வு ரத்து மற்றும் குளறுபடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணிச் சார்பில் ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

tn neet exam issue
tn neet exam issue (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 10:33 PM IST

சென்னை: ''நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது'' என திமுக எம்எல்ஏ-வும், மாணவர் அணிச் செயலாளருமான சி.வி. எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை - கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து, “நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.

''மேலும், நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது - வினாத் தாள்களை திருடுவது - விடைத்தாள்களை மாற்றி வைப்பது - மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபிடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் தி.மு.க. நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.

''இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

''நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.

''நீட் தேர்வு என்பது, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று நான்கு பாடப்பிரிவுகளில் இருந்து 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

''ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டிருந்தால் 716 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரு கேள்விக்கு மட்டும் தவறாக பதில் அளித்திருந்தால் அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் பெறலாம். இப்படி இருக்கு, சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மதிப்பீட்டு முறைப்படி இந்த மதிப்பெண்களை எந்த மாணவரும் பெறவே முடியாது. எனவே இந்த தேர்வில், ஒருவர் பெறுவதற்கு சாத்தியமில்லாத மதிப்பெண்களை சில மாணவர்கள் பெற்றிருந்தது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

''இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபிடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

''இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

''மேற்குறிப்பிட்ட பிரச்சினை பலருக்கும் ஏற்பட்டிருந்தாலும், அனைவரும் நீதிமன்றத்தை நாடியிருக்க மாட்டார்கள், புகார் அளித்திருக்க மாட்டார்கள். மீகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளது. இதனால், தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை இத்தேர்வு முறை ஏற்படுத்தியுள்ளது.

''குஜராத் மாநிலம், பன்ச் மகால் மாவட்டம், கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் பெரிய முறைகேடு நடந்த நாடறிந்ததே. அதாவது, தேர்வு மையத்தில் ஜெய் ஜலராம் பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட் என்பவர், தேர்வு மையத்தின் துணை சூப்பிரண்டாக இருந்துள்ளார்.

''அவர், பணியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம், “நீட் தேர்வில் விடை தெரியாவிட்டால் அதனை எழுதாமல் விட்டு விட சொல்லியும், தேர்வு முடிந்த பிறகு சரியான விடைகளை அவரவர் விடைத்தாளில் எழுதி தரப்படும்” எனக்கூறி ரூ. 10 கோடி அளவிற்கு பேரம் பேசி 16 மாணவர்களின் தேர்வு எண் மற்றும் அவர்களது பெயர் கொண்ட விவரத்தை செல்போனில் வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியே செய்தி வரவே அவர் மாட்டிக் கொண்டார். ஆனால், இதில் சந்தேகம் எழுப்புவது என்னவென்றால், முறைகேடு நடைபெற்ற ஒரு இடத்தில் மட்டும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். ஆனால், எத்தனை இடங்களில் மறைமுகமாக முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது யாருக்கு தெரியும்?

''திமுக ஆட்சி அமைந்த உடன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது தி.மு.க. அந்த குழுவின் பரிந்துரையின்படி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டபம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது வரை காத்திருப்பில் உள்ளது.

''இன்று நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபிடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.

''நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபிடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து கழக மாணவர் அணிச் சார்பில் வரும், 24.06.2024 அன்று காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் ஏன்? - சந்தேகம் கிளப்பும் கிருஷ்ணசாமி

ABOUT THE AUTHOR

...view details