சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை, சமத்துவம் இல்லாத தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை, அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை, அவர்களது மருத்துவ கனவைச் சிதைத்து, நீ டாக்டர் ஆக முடியாது என்றும், உனக்கு தகுதியில்லை என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.
மேலும், நீட் தேர்வு என்பதே மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது வினாத் தாள்களை திருடுவது, விடைத்தாள்களை மாற்றி வைப்பது, மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.
நீட் தேர்வு என்பதே சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காக தான் ஆரம்ப நாள் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.
அந்த வகையில் திமுக மாணவர் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொடர் போராட்டங்களையும், தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மூலம் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என அனைத்து அறப்போராட்டங்களையும் மாணவர் அணி முன்னெடுத்து நடத்தி உள்ளது.
அதன்பின் திமுக ஆட்சி அமைந்த உடன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது திமுக. அந்த குழுவின் பரிந்துரையின்படி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டடு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது வரை காத்திருப்பில் உள்ளது.
பாஜக அரசு நீட் தேர்வினை 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது முதல் திமுக கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது.