தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் எஸ்.வாசுதேவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், துணைச் செயலர்கள் ப்ரியம் ஜெ. சசிதரன், எம். சிவானந்தம், டி. செந்தாமரை ஆகியோா் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகள், வாா்டுகளில் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கட்சி நடவடிக்கைகள் பற்றி மாவட்டச் செயலர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்பி ராமலிங்கம், க.அன்பழகன் எம்எல்ஏ, தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியயோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.கல்யாணசுந்தரம் (Credits - ETV Bharat Tamil Nadu) கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.கல்யாணசுந்தரம், "தலைவர் கட்டளையிட்டால், அதனை கடமையாக எண்ணி செய்து முடிப்பவர்கள் திமுகவினர். பாபநாசம் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வராமலேயே தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்தோம். மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் யார் என்று தெரியாமல், அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக நாங்கள் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் 2 புடவை, 2 ஜாக்கெட்டுடன் வந்து எளிதாக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர் என்று மறைமுகமாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சுதா குறித்து கிண்டலாக, நையாண்டி தனமாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:நாட்டின் செலவினத்தை குறைக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து
தொடர்ந்து பேசிய அவர், “வருகிற 2028 மகாமகத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயார் செய்து வருகிறோம். ஒவ்வொரு மகாமகத்திற்கும் நாம் திட்டங்கள் தீட்டி செயல் வடிவம் கொடுப்போம். ஆனால், மகாமகம் நடக்கும் போது நாம் ஆட்சியில் இருக்க மாட்டோம் என வேதனையோடு குறிப்பிட்டார். நாம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்முடைய கடமையை நாம் செய்வோம்.
வருகிற நவம்பர் 7ஆம் தேதி தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கும்பகோணம் தாராசுரம் அருகே அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக அதிமுக ஆட்சியில், 1992, 2004, 2016 மகாமகங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ரா. தட்சிணாமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரா.அசோக்குமார், எல். ராஜேந்திரன் உள்ளிட்ட வட்டச் செயலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகரச் செயலரும், துணை மேயருமான சு.ப. தமிழழகன் வரவேற்றார். பொருளாளர் எஸ். ரவிச்சந்திரன் நன்றி கூறினாார்.