சென்னை:சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, திமுக முப்பெரும் விழா நாளை மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடு பணிகளை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “நாளை மாலை 5 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகள் மாநில மாநாட்டிற்கு நிகராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெறுவது சிறப்பானது.
இந்த ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முரசொலி பவளவிழா கொண்டாடப்பட்டது. மேலும் தேசிய அளவிலான மகளிர் தலைவர்கள் அடங்கிய மாநாடும் இங்கு நடைபெற்றது. அதேபோல் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் இங்கு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது திமுகவின் பவள விழா முப்பெரும் விழாவும் முதலமைச்சர் தலைமையில் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த நிகழ்வை பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது 80,000 இருக்கைகள் வரை அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்கள், திமுக ஆதரவாளர்கள் என லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருகின்றனர்.