தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக தன் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது" - உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் பதில் மனு!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தனது கருத்துக்கு எதிராக திமுக அவதூறு வழக்கு தொடர முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாிமி, உயர் நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாிமி, உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 4:42 PM IST

சென்னை:திமுக நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு கைதாகும் நிலையில், தனது கருத்துக்கு எதிராக திமுக அவதூறு வழக்கு தொடர முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுத் தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்விட் செய்ததாக கூறியுள்ளார்.

கறைப்படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், ஜாஃபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனவும், உண்மையை மறைக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க உயர் நீதிமன்றமே குழுவை அமைத்துள்ள நிலையில், ஒரு எதிர்கட்சியாக அரசின் செயல்படாததன்மையை சுட்டிக்காட்டுவது அவதூறு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக தான் கூறியதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை எனவும், இதுதொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை உச்சபட்ச அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும்' என பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details