"திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய கமல்ஹாசன் போன்றோர்களின் முகம் தேவைப்படுகிறது" - குஷ்பு பேச்சு! வேலூர்: வேலூர் தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில், ஏசிஎஸ் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம், இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மார்ச் 10) நடைபெற்றது.
இவ்விழாவுக்கு புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் தலைமை வகித்தார். மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜக அகில இந்திய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, திரைப்பட இயக்குநர் சுந்தர் சி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தனர்.
பின்னர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறிக்கொண்டே கூட்டணிக்காக கட்சிகளை தேடுகிறது என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “பாஜகதான் வெற்றி பெறுகிறதே, அப்படியிருக்க அவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு திமுகவில் ஆட்கள் இல்லை. ஸ்டாலின் சென்றாலும் கூட்டம் கூடாது.
இதனை கருத்தில் கொண்டே தேர்தலை எதிர்கொள்ள கமல்ஹாசன் போன்றவர்களின் முகம் தேவைப்படுகிறது. அதனால்தான் கமல்ஹாசனுக்கு திமுக மாநிலங்களவை இடம் அளித்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் பாஜகவுடன் பல கட்சிகள் இணைந்து வருகின்றன. அதற்கு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு அடைந்துள்ள வளர்ச்சிதான் காரணமாகும்.
கடந்த 65 ஆண்டுகளில் காங்கிரஸ் அடைய முடியாத வளர்ச்சியை, பாஜக கடந்த 10 ஆண்டுகளில் அடைந்து காட்டியுள்ளது. இதுதான் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம். தமிழகத்தில் 1967-க்குப் பிறகு காங்கிரஸால் சொந்த காலில் நிற்க முடியவில்லை. திமுக அல்லது அதிமுகவுடன் சேர்ந்துதான் பயனடைந்து வருகிறது. தைரியம் இருந்தால், தமிழகத்திலாவது காங்கிரஸ் தனித்து போட்டியிடட்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருவதை திமுகவினர் விமர்சித்துள்ளனர் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது அவர்களின் அச்சத்தைதான் காட்டுகிறது. பிரதமர் மோடி வரும்போது, தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் போட்டியிடச் சொன்னாலும் போட்டியிடுவேன் அல்லது நாடு முழுவதும் பிரசாரம் செய்யச் சொன்னாலும் பிரசாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்யத்தான் வந்துள்ளேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்து விட்டதா? இப்போதுதானே அவர் கைதாகி உள்ளார். தொடர்புடையவர்களின் பெயர்கள் இனிமேல்தான் வெளியே வரும். அதேசமயம், அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம்தான் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா என கேட்கிறீர்கள். புதிதாக வந்துள்ளார். ஒப்பிட்டு பார்க்கத் தேவையில்லை. முயற்சி செய்யட்டும். 2026 தேர்தல் குறித்து 2026-இல் பேசுவோம்" எனப் பேசினார்.
இதையும் படிங்க:மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!