சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், '' ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக கருதுகிறேன். இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் இந்த முக்கியமான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிகிறேன்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும் போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.