சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடி விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாக திமுக எம்பி வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக இருந்து வருகிறார்.
பொன்முடி 19.12.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால், 11.03.2024 அன்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தது. அவ்வாறு தீர்ப்பை மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தபோது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராகத் தொடரவோ இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இடைக்கால உத்தரவு விதிப்பதாகவும், இல்லையென்றால் அது சரிசெய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
பதவிநீக்கம் செல்லாது என அறிவிப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால உத்தரவு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 13.03.2024 என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் 19.12.2023 தேதியிலான அவரது பதவிநீக்கம் செல்லாது என்று அறிவித்தார். மேலும், 16.03.2024 அன்று திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி (எண்.76) காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையையும் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்:எனவே, அரசியலமைப்பின்பாற்பட்ட அனைத்து நிறுவனங்களும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டுள்ளன. பொன்முடி அவர்களது வழக்கின் தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.03.2024 அன்று, பொன்முடி அவர்களை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநரின் விளக்கம்..அரசியலமைப்பை அவமதிப்பதாகும்?:இவையனைத்தையும் மீறி, ஆளுநர் ரவி, "உச்சநீதிமன்றம் தீர்ப்பினை நிறுத்தித்தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை" என உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது ஓர் அபத்தமான பொருள்கோடல் என்பதோடு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலுமாகும். அரசியல் சட்டப்பிரிவு 142 மற்றும் 144-ன் படி ஆளுநர் என்பவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். மேலும், பொன்முடி அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்தது சட்டமீறலும் அரசியலமைப்புப் பிரிவு 164(1)-க்கு எதிரானதும் ஆகும்.