சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற நான்காம் நாள் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, சட்டத் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை உள்ளிட்டவைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது உரையாற்றிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி, உரை துவங்கியதிலிருந்து தொடர்ந்து மு.க ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "பேரவையில் பேசறீங்களா.. பொதுக்கூட்டத்தில பேசறீங்களா.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.." என கூறியுள்ளார்.
மேலும்,"அரை நூற்றாண்டாக நான் இந்த அவையில் இருக்கிறேன். இந்த அவையின் கண்ணியம், கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது எனக்கு வருத்தம் தருகிறது. இங்கு பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசக் கூடாது. தங்கள் கட்சித் தலைவர்கள் என்ன செய்தனர் என புகழ்வதில் தவறில்லை.ஆனால் பொதுக்கூட்டத்தில் வட்டச் செயலாளரையும் என குறிப்பிட்டுப் பேசுவதைப் போல் இங்கு பேசக்கூடாது" என அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கடிந்து கொண்டுள்ளார்.
இதேபோல, ஜூன் 22ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது உரையின்போது 'பொய்' என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பேசினார். இதற்கு, 'வெளி மேடையில் பேசுவதைப் போல, சட்டப்பேரவையில் பேசுவது நாகரிகமற்றது என்றும், சபையில் என்னப் பேச வேண்டும் என ஒரு நாகரிகம் உள்ளது எனவும் அதை மட்டும் பேசுங்கள்' எனவும் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க மதுவே காரணம்: ஆய்வறிக்கையில் தகவல்! - increase widowhood in tamil nadu