புதுக்கோட்டை:தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்று பணியாற்றி வருகிறார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எப்போது தீவிர அரசியலுக்கு வருவார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என திமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு இடங்களில் தனது பிரச்சாரத்தை சிறப்பாக மேற்கொண்டார் உதயநிதி. மத்திய அரசின் திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் இருந்ததை, பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதத்தில், எய்ம்ஸ் என்ற வாசகத்துடன் ஒரே ஒரு செங்கலை கையில் உயர்த்தி பிடித்து, சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதோ, அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக மூத்த முன்னோடிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்கு இருந்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு மாவட்ட முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லும் பொழுது, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தும் வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் கட்சிக்கு வந்தாலும், அவர்களையும் நாங்கள் வரவேற்போம் என பல்வேறு கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் ஒருபடி மேலே சென்று, திமுகவில் விரைவில் உதயமாகிறது 'இன்பநிதி பாசறை' என்கின்ற சுவரொட்டி, நகர் பகுதியில் முழுவதும் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியில் 'எதிர்காலமே' எனக் குறிப்பிட்டு, 'இன்பநிதி பாசறை' என்ற பெயரில், செப்டம்பர் 24ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர்கள் அச்சடித்து நகரம் முழுவதும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுருந்தனர்.