சென்னை:இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும் - மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாகத் திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடைபெறவுள்ளது.