MP Raja speech about pm modi ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராசா கலந்து கொண்டார். முன்னதாக, தாளவாடி மலைப்பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக கட்டணமில்லா இலவசப் பேருந்து சேவையை எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசுகையில், “39 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் டெல்லி அதிர்ச்சியோடு பார்க்கிறது, எங்களை பார்த்தால் பயப்படுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம்தான் மதவாதம், ஊழல் ஆகியவற்றை எதிர்த்து இருக்கும் ஒரே இயக்கம்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்களை பார்த்து பயப்படாத இயக்கம் திமுகதான். தாளவாடியில், ஒரே காம்பவுண்டிற்குள் மாரியம்மன் கோயில், சர்ச், நடுவில் மசூதி இருக்கிறது. இந்த பூமி சமத்துவத்தை வலியுறுத்துகிறது. இதைத்தான் நாம் விரும்புகிறோம், மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கிறார்கள்.
ஏன் ஒற்றுமையாக இருக்கிறீர்கள், சண்டை போடுங்கள், அப்போது தான் எனக்கு வேலை என்கின்றனர் மோடியும், அமித்ஷாவும். மதச்சண்டை வந்தால்தான் நான் பிரதமராக இருக்க முடியும் என்ற ஆட்சி மத்தியில் நடக்கிறது. அரசியல் சட்டம் இருந்தால்தான் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க முடியும், அனைத்து மொழிகளும் வாழும்.
ஆனால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவோம் எனக் கூறி மதப்பிளவை ஏற்படுத்துகிறார்கள். இந்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இனி யார் என்பதை தலைவர்தான் தீர்மானிப்பார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்னும் பத்து ஆண்டு கழித்து நான் இங்கு வந்தாலும், அல்லது நீங்கள் என்னை பார்க்க வந்தாலும், என்னை தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு அளித்த உங்களுக்கு நான் எப்போதும் உரிய மரியாதை தருவேன்” என்றார்.
இதையும் படிங்க:தேர்தல் தேதி அறிவித்தால் பொன்முடி பதவியேற்பில் சிக்கலா? - சபாநாயகர் அளித்த விளக்கம்