தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

IUML-க்கு மீண்டும் ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதி.. திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உறுதி! - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Ramanathapuram constituency for IUML: திமுக கூட்டணிக் கட்சிகளுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.24) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த IMUL மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

மீண்டும் IUML-க்கு ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதி
மீண்டும் IUML-க்கு ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:25 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியும், பிரதானக் கட்சியாக அறியப்படும் திமுக அதன் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் மக்களின் நேரடி நிலைப்பாட்டைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடு எனப் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது திமுக.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.24) நடைபெற்றது. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசியச் செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் திமுக உடனான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

தொகுதி உடன்படிக்கைக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்க்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கும் அனுப்பி வைத்த பெருமை திமுகவையே சேரும். இந்த நல்ல வரலாறு தொடர்ந்து வரவேண்டும்.

இனி வருங்காலத்திலும் திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி இருக்க வேண்டும். மாநிலங்களவைக்கான சீட் ஒதுக்கித் தந்தால் மேன்மையாக இருக்கும். இந்தத் தேர்தலில் தொகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து கட்சிக்குக் கொடுத்துள்ளனர். மாநிலங்களவை பற்றி எந்த முடிவும் கூறவில்லை. தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனியே போட்டியிடுவார். அதனை திருச்சியில் பொதுக்குழு ஒன்றைக் கூட்டி முறைப்படி அறிவிப்போம். இந்தத் தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல் 2024 எப்போது? - போலியான செய்திப் பரவுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details