திருநெல்வேலி:மத்திய அரசு, தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதைக் கூறி, நெல்லை டவுண் ஈசான முக்கில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டம் இன்று (பிப்.8) நடைபெற்றது. அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால், மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியது. ஆனால், இன்று வரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மோடி எய்ம்ஸ் கல்லூரிக்காக நட்டிய ஒற்றைச் செங்கல்லை வைத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து, திமுக அரசு ஆட்சிக்கும் வந்துவிட்டது.
மோடி அரசிற்கு கொஞ்சமாவது உணர்வு இருந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் என்கிற சொரணை ஏற்பட்டு, கொஞ்சமாவது நிதி வழங்கி எய்ம்ஸ் கல்லூரியைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் மோடி அரசின் ஆயுட்காலமே முடியப் போகிறது. இதுவரையிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த மழை வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்து படம் போட்டார். வெள்ள நிவாரணத்திற்காக சல்லி பைசா கூட தரவில்லை.