கோயம்புத்தூர்:கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த மே 27ஆம் தேதி, ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை செக்யூரிட்டி, நிர்வாகிகள் உட்பட 8 பேர் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திமுக கோவை மாநகர மாவட்ட தலைவர் ரகுநாத் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், திமுகவைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உயிரை காப்பாற்றக்கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சம்பவம் நடைபெற்ற மருத்துவமனை கோவையில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற ஒரு மருத்துவமனை.
இதையும் படிங்க:சிகிச்சைக்காக வந்தவரை அடித்துக் கொன்ற மருத்துவமனை நிர்வாகத்தினர்? கோவையில் நடந்தது என்ன?
இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவத்துறை சார்பில் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கலாம். இந்த பிரச்னையை கூட மூடி மறைக்க பார்த்தார்கள். ஆனால், ஊடகங்களில் வெளிவந்ததற்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் நடந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து அந்த மருத்துவமனையை மூட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவு" என திமுகவின் கோவை மாநகர மாவட்ட தலைவர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கம்பிகளை திருட முயன்றதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்களால் ராஜா என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், வர்த்தக பிரிவு மேலாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ், மருத்துவமனை காவலாளிகள் சரவணகுமார், மணிகண்டன், சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட 8 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வண்ணாரப்பேட்டை செருப்பு கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது!