கோவை:2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கோவை நவஇந்தியா பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜாபர் சாதிக் வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஒரு மூத்த நீதிபதி வழக்கிலிருந்து விலகுவதாக கூறுகிறார். அவருக்கு வேறு ஏதேனும் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமா? என்பதை சொல்ல வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. இந்த வழக்கில் விரைவில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சபாநாயகர் நடுநிலைமையாக இருக்க வேண்டும். அவர் அவ்வாறு இருக்கிறாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.ஆளுநருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் சண்டை போடுகிறார். இதன் காரணமாக ஆறு கல்விக்கூடங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. கல்வியில் இவர்கள் அரசியல் செய்வதால் தான் ஆளுநர் அவரது கருத்தை கூறுகிறார். நீங்கள் தரும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போடுகிறார். இந்த விஷயத்தில் அமைச்சர் தான் அரசியல் செய்கிறார்,"என்று கூறினார்.
இதையும் படிங்க:"உண்டியலில் போட்ட அனைத்தும் முருகனுக்கே சொந்தம்" - மொபைலைப் பறிகொடுத்தவருக்கு ஷாக் கொடுத்த திருப்போரூர் கோயில்!
கோவையில் பாட்ஷா இறுதி ஊர்வலம் குறித்து அமைச்சர் ரகுபதி கூறிய கருத்துக்கு பதில் தெரிவித்த அண்ணாமலை, "திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி போராடினால் அதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை, சில இடங்களில் கூட்டம் சேர்ந்தாலோ அல்லது இரண்டு பேர் வந்தாலோ கூட கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று அறிய விரும்புகின்றேன்.
தமிழக முதலமைச்சரை நாற்காலிகளில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் அனைத்து வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதற்கு தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பது என்று முதல்வர் கிளம்பி விடுகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயித்து காட்டுவோம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். 200 தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை இதைவிட மோசமான கருத்தை யாரும் சொல்லவில்லை. அமைச்சர் ரகுபதியை கான்ஸ்டபிள் பயிற்சி வகுப்பில் அமர வைத்து, காவல்துறையின் வேலை என்ன? என்பதை கற்றுத் தர வேண்டும்,"என்றார்.